நிறம்

lady 02
#
அவன் கவிழ்த்து வைத்தக் கோப்பையை நிமிர்த்தி மீண்டும் வெண்ணிற வோட்காவை நிரப்பி ஒரே மூச்சில் கல்ஃப்பாக அடித்தாள்
கொத்தாக அவன் முன் சட்டையைப் பிடித்திழுத்து கொஞ்சம் அவனுக்கும் உதட்டோடு உதடாக அமுதூட்டினாள், பின் கெக்கலித்து பெருஞ்சிரிப்பு சிரித்தாள்
எழுந்து நின்று – எங்கே நின்று, தவழ்ந்தவளை பொன்னிற இடையில் கைகோர்த்து அணைத்து நடந்தான் கையில்லாத ஜாக்கெட் மற்றும் சிவப்புச் சேலையில் ச்சும்மா சுள்ளென்று இருந்தாள்

#
வீதியும் வீடும் அருகில் நெருங்க ஒரு நிமிஷம் என்றாள்
புரவியை வேகம் குறைத்து ஓரங்கட்டினான்
காற்றில் அலைபாய்ந்த கார்குழலை கற்றையாய் ரப்பர் பேண்டில் முடிச்சிட்டாள்
கீழ் இடையில் தளர்ந்திருந்த புடவையை சற்றே சரி செய்து நீவினாள்
தோள் பையைத் திறந்து புத்தம் புதிய மஞ்சள் தாலியை எடுத்து கழுத்தில் அணிந்துகொண்டாள்
பச்சையாய் அவளை ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு, எதிர்பாராத முத்தம் கொடுத்தாள்
அந்த முத்தத்தில் இருந்த வன்முறையை ரசித்தான்
காதலித்தபோது கிடைக்காததெல்லாம் வட்டியும் முதலுமாய் இப்போது கிடைக்கிறது
நிதானத்திற்கு வந்தவன் கேட்டான்
– திருமணம் முடிந்த மறுநாளே வெளியில் வருகிறாயே, உன்னவன் கேட்டால்
– நண்பனை பார்க்கப்போவதாக சொல்லிவிட்டுத்தான் வந்தேன்
– ஓஹோ
– அவனுக்கும் பெண் நண்பிகள் உண்டு
புரவியை விரட்டி அவள் வீட்டின் தெருமுனையில் நிறுத்தினான்
நீலம் பூத்தே பார்த்துப்பழகிய அவளின் பார்வையில் இன்று மிருகத்தின் முரண்நகை ஒளிர்ந்தது
அலட்சியமாக இறங்கி நடந்தாள், கால்கள் ஒன்றோடொன்று பின்னின
அரேபியக் குதிரை எப்படி நடந்தாலும் அழகுதான்

#
மறுநாள் முற்பகலில் வந்த அலைபேசி அழைப்பு அவன் கண்களின் இமைகளை வற்புறுத்தி பிரித்தது
பெயர் திரையில் ஒளிர்ந்தது, எடுப்பதா தவிர்ப்பதா – திரும்பிப் படுத்தான்
சற்றைக்கெல்லாம் குறுஞ்செய்தி ஒன்று உள்பெட்டியில் வந்து விழுந்து ஒலித்தது, எடுத்துப் படித்தான்
– இன்றைக்கு எத்தனை மணிக்கு நாம் வெளியில் போகிறோம்
– மன்னிக்கவும், விருப்பமில்லை
– பிறன்மனை நோக்காமை?
– இல்லை
– பிறகு
– ஒரு ரகசியத்தை பிறருக்கு தெரிந்தே செய்வதில் ‘த்ரில்’லே இல்லை
சிவப்புப் பொத்தானை அலைபேசியில் அணைத்து தூக்கி எறிந்தான்
தூக்கம் களைந்திருந்தது, மல்லாந்து படுத்தான்
கறுப்பு பூனை ஒன்று விட்டத்தில் பாய்ந்தது

EmailPrintShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *